Thursday, June 7, 2012

சகுனம்

06.06.2012  விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் வெளியான   பி.எஸ் . குமார்  எழுதிய  சகுனம்  எனும்  கவிதை

சகுனம்
************

அவன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட
ஒரு காலை வேளையில்
குறுக்கே வந்தது
குட்டிகளை ஈன்று
இரண்டு நாட்களே ஆன
சாம்பல் நிற தாய்ப் பூனை ஒன்று
பூனை குறுக்கே வந்ததால்
கெட்ட சகுனமெனப் பரபரத்த
அவன்
கோபமுற்று கீழே கிடந்த
கூரான கல்லெடுத்து
பூனை மீது வீச
கல்லடிபட்ட பூனை
துள்ளிக் குதித்து பாய்ந்தோடி
சாலையில் விரைந்த
பேருந்து சக்கரத்தில் நசுங்கி
துடிதுடிக்க இறந்துபோனது சாலையில்
குருதி உறைய
தாய்ப் பூனையைக் காணாத
குட்டிகள் ஏக்கத்தில் சுணங்கலாம்
பசியால் வாடலாம்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்தும் போகலாம்
புறப்பட்டவன் சிறிது நேரம் தாமதித்து
எந்த சகுனமுமின்றி
தனது பயணத்தை தொடரலாம்
இரை தேடித் தனது இருப்பிடத்திலிருந்து
வெளிப்பட்ட பூனைக்கும்
தனது வீட்டிலிருந்து
பயணம் புறப்பட்ட அவனுக்கும்
யாருக்கு யார் கெட்ட சகுனம்?
அவனுக்கு பூனையா ?
பூனைக்கு அவனா?

No comments:

Post a Comment