இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு
முன்பாகவே எல்லா வழிகளிலும் விளம்பரப்படுத்தப்படுகிறது . பட இயக்குனர் மற்றும் நடிகர்
,நடிகைகள் ஆகியோர்களின் நேர்காணல்கள் தொலைக்காட்சிகளில்
ஒளிபரப்பப்படுகிறது .அது மாதிரியான நேர்காணல்களில் ஏன் உங்கள் படங்களில் வன்முறை (அ)
ஆபாசம் அதிகமாக இருக்கிறது ? என்ற மாதிரியான கேள்விகளுக்கு இயக்குனர் சொல்லும் பதில்
எப்பொழுதும் என்னவாக இருக்கிறதெனில் “நாங்கள் இல்லாததையா காட்டியிருக்கிறோம். சமூகத்தில்
என்ன நடக்கிறதோ அதைத்தான் நாங்கள் காட்டியிருக்கிறோம்
என்று மிக சமூக பொறுப்புடன் இருப்பதாய் காட்டிகொண்டு பதில் சொல்வதைப் பார்த்திருக்கிறோம் . அந்த கேள்விக்கு
அவர்கள் சொன்ன பதில் சரியா ?
பழைய சினிமாக்களில் எல்லாம் என்ன செய்தார்கள்
? . இந்த மாதிரியான மட்டுமீறிய ஆபாச காட்சிகளும் , கொடூரமான வன்முறைக் காட்சிகளும் அப்போது இருந்ததா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது
.
பழைய சினிமாக்களில் எல்லாம் நமது கலாச்சார
சீரழிவு இல்லாத,நம் கலாச்சாரத்தை போற்றுகிற , சமூகத்திற்கு எது நல்லதோ அந்த மாதிரியான காட்சிகளை
அதிகபட்சமாக படமாக பதிவு செய்தார்கள் . தவறு செய்தவனுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் காட்சிகள் , ஒருவனை மட்டுமே கடைசி வரை காதலித்து
மணமுடிக்கும் காதலி , தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் மற்றும் தன் குடுப்பத்தினரே
தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்கும் ஊர்த்தலைவர் , எதிரியையும் மன்னிக்கும் மற்றும் நியாயப்படி மட்டுமே நடந்துகொள்ளும்
கதாநாயகன் , நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் நண்பன் , சாதியை விரும்பாத மற்றும் அதை
ஒழிக்க நினைக்கும் கொள்கைகள் கொண்ட இளைஞன்
,ஏழைகளுக்கு சேவை செய்யும் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்க்காக தன் பணக்கார வாழ்க்கையை
விடுத்து எளிமையான வாழ்க்கை வாழும் கதாநாயகன் , மக்களுக்கு கெட்டது செய்வனையும்
& சுயநலவாதியையும் மற்றும் நியாயப்படி நடக்காதவனையும் இந்த சமூகம் தவறாக நினைக்கும்
காட்சிகளும் , தன் பண்ணையில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு சரியான ஊதியமும் கொடுத்து
மரியாதையுடனும் நடத்தும் பண்ணையார் , தன் மனைவியாக இருந்தபோதும் தன்னை விரும்பாத பெண்ணை
தொட
மறுக்கும் ஆண் , சுய ஒழுக்கத்துடன் தன் குழந்தைகளுக்காக வேலைக்கு சென்று தனியாக குடும்பத்தை
காக்க போராடும் இளம் விதவை பெண் , ஆதரவற்ற பெரியவர்களை காப்பாற்றும் கதாநாயகன் , தன்
பெற்றோரை காப்பாற்றதவனை சமூகம் சபிக்கும் காட்சிகளும் ,தான் திருமணம் செய்யாமல் தன்
தம்பி தங்கைகளை வளர்த்து ஆளாக்குபவனை பற்றிய காட்சிகளும் பழைய படங்களில் மிகைப்படியாக
காட்டப்பட்டன .
பழைய படங்களில் எடுத்தது மாதிரியான காட்சிகளை
அப்படியே எடுக்கவேண்டுமென்று சொல்லவில்லை. பழைய படங்கள் எடுக்கப்பட்ட போதும் சமூகத்தில்
வன்முறைகளும் ,ஒழுக்கமில்லாத மாதிரியான நிகழ்வுகளும் நடந்திருக்கலாம் , இருந்தாலும்
அப்போது உள்ள இயக்குனர்கள் அதை சரியான முறையில் கையாண்டார்கள் .ஏனெனில் அப்போதைய இயக்குனர்கள்
அத்தகைய வன்முறை மற்றும் ஒழுக்கமில்லா செயல்கள் மற்றும் மக்களுக்கு சேவை செய்யாத மக்கள்
பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை தீயவர்களாகவும் மக்களுக்கு பிடிக்காதவர்களாகவும்
காட்டினார்கள் . ஆனால் இப்போது வெளிவரும் படங்களில் கதாநாயகனே வன்முறை மற்றும் ஆபாசமான
காட்சிகளில் வருவது போலவும் ,அதை நியாயப்படுத்த ஏதோ ஒரு காரணம் இருப்பதையும் காட்டுகிறார்கள்.
பழைய படங்களில் எல்லாம் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்பவர்களை குடும்பத்திற்கு அழியா அவமானம் இழைத்துவிட்டதாக
தண்டிக்கும் காட்சிகள் வரும் . ஆனால் இப்போதெல்லாம் கதாநாயகனும் ,கதாநாயகியுமே அப்படி
நடந்துகொள்வதாகவும் , அது மிகப் பெரிய அவமானம்
இல்லை என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. உயிரையே தன் நண்பனுக்காக ஒருவன் கொடுக்கும் காட்சிகளை காட்டிய பழைய படங்களை போல்
இல்லாமல் இப்போதெல்லாம் தன் நண்பனுக்கே துரோகம் செய்பவன் ,நண்பனையே தன் சுயநலத்திற்காக
கொலை செய்பவன் பற்றிய காட்சிகளே நிறைய எடுக்கப்படுகிறது . இந்த கால சினிமாக்களில் ஆபாசமான
உடைகள் எல்லாம் நவீன கால உடைகளாக சித்தரிக்கப்படுகிறது . நாம் வாழ வேண்டுமெனில் என்னவேண்டுமென்றாலும்
செய்யலாம் என்று கதாநாயகனே வசனம் பேசும் சினிமாக்களே வெளிவருகின்றன .
வருங்கால & இக்கால குழந்தைகளைப் பற்றி
நினைத்து பாருங்கள் . ஒரு கிராமத்தில் உலகமே தெரியாத ஒரு சிறுவனுக்கு இந்த சமூகம் எப்படி
,எது நல்லது , எது கெட்டது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கூடம் தவிர்த்து சினிமா நிறைய
விஷயங்களை கற்றுத் தருகிறது . வன்முறைகளும் ஆபாசங்களும் நிறைந்த ,நம் கலாச்சாரத்தின்
சுவடே இல்லாத இப்போதைய சினிமாக்களை பார்த்தால் கிராமத்தில் வாழும் ஒரு சிறுவன் என்ன
நினைக்ககூடும் ? . நாம் சிறுவர்களாய் இருக்கும்போது இந்த மாதிரியான ஆபாச , வன்முறை
காட்சிகளை பார்த்திருந்தால் நாம் என்ன மாதிரி நாம் ஆகியிருப்போம்? .
ஆபாசங்களையும் , வன்முறைகளையும் இந்த கால
சினிமாக்கள் இளைஞர்களின் மனதில் பதியவைத்துவிட்டன . தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான
விஷயங்களை கூட அடிக்கடி காடுவதன் மூலம் ”அது
ஒன்றும் பெரிதில்லை எல்லா இடத்திலும் நடக்குறது தான் ” என்று மக்களை சொல்ல வைத்துவிட்டன .
இயக்குனர்களே , சமூகத்தில் நடக்கும் விஷயங்களை மக்கள் கேள்விப்பட்டோ
, தினசரிகளையோ , வார இதழ்களையோ படித்து தெரிந்து கொள்வார்கள் .இந்த சமூகம் எப்படி இருக்க
வேண்டும் என நீங்கள் நினைக்கும் நிகழ்வுகளையும் ,தமிழ் கலாச்சாரம் எப்படி இருந்தது
என்பதையும் , உலகத்திற்கே ஒழுக்கத்தை கற்றுகொடுத்த நம் பெருமைகளைப் பற்றியும் மிகைப்படியான
காட்சிகளை திரைப்படங்களில் கொடுக்க முயற்சி செய்யுங்கள் .
அப்படிப்பட்ட படங்கள் பொருளாதார ரீதியாக
வெற்றி பெறுமா ? என நீங்கள் கேட்கலாம் . வன்முறை , ஆபாச காட்சிகள் அதிகம் இல்லாத பழைய
சினிமாக்கள் பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கின்றன . இந்த காலகட்டத்திற்கு
ஏற்றாற்போல் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை இல்லாமல் , பொருளாதார ரீதியாக வெற்றிபெறும்
அளவுக்கு திரைப்படம் எடுப்பதுதானே உங்கள் முன்
வைக்கப்படும் சவால் . அதை ஏற்றுக்கொள்ளுங்கள் . வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த படங்கள்
எடுக்க ரொம்ப கஷ்டபட வேண்டியதில்லை மற்றும் பொருளாதார ரீதியாகவும் கவலைப்பட தேவையில்லை என்பதற்காக இந்த
தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்க நீங்கள் நினைப்பது சரியா ?
சினிமா என்னும் ஆயுதத்தை காந்தியின் கையில் கிடைத்த அகிம்சை எனும் ஆயுதம்
போல சரியாக பயன்படுத்தினால் இருட்டி போன தமிழ் சமூகத்தில் விடியல் பிறக்கும் .